கைவிரித்த சரத்பவார், பாஜகவை விட்டால் கதி இல்லை, விழிபிதுங்கும் சிவசேனா…. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியா?

மும்பை, நவம்பர்-06

ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என தேசியவாத காங்கிரஸ் அறிவித்த நிலையில், மீண்டும் பா.ஜ.க.வுடன் சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை சிவசேனாவுக்கு ஏற்பட்டுள்ளது.  

மகாராஷ்டிராவில் 228 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்து ஒற்றுமை இல்லாததால் இழுபறி நீடித்தது.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரியது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது. வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கிடையே சிவேசனா தனது பிடியில் உறுதியாக இருந்தது. மகாராஷ்டிரா மக்கள் சிவசேனாவில் இருந்து முதல்வராக ஒருவர் வருவதைத்தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அடிக்கடி கூறி வந்தார்.  இதனால், பாஜக- சிவசேனா இடையிலான சிக்கல் தொடர்ந்து கொண்டே வந்தது. இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் சிவசேனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

இந்த சூழலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்குமா என்ற யூகமும் வலுத்து வந்தது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்றும், தன்னுடைய கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என அறிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்கள் தேவை. சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு வேளை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தாலும் ஆட்சி அமைப்பதற்கான போதிய இடங்கள் கிடைக்கவில்லை. 44 இடங்களில் வென்ற காங்கிரசும் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தற்போது தேதியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கைவிரித்துவிட்டதால், சிவசேனா இனிமேல் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதைத் தவிர சிவசேனாவுக்கு வேறு வழியில்லை.

சிவசேனாவுக்கு பாஜக விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் ஆட்சியில் சமபங்கு அளித்தால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது பாஜகவுடன் சிவசேனா இணக்கமாகச் சென்று ‘அமைச்சரவையில் வேண்டிய இடங்களைப்’ பெற்று ஆட்சி அமைக்க வாய்புள்ளது. இவை இரண்டும் நடக்காமல் ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்யும் பட்சத்தில் 8-ம் தேதிக்குப்பின் மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *