தலைநகரை கலக்கும் பள்ளி மாணவியின் ”என் வீதி என்ன உன் கழிப்பறையா” ? விழிப்புணர்வு போஸ்டர்…

சென்னை, நவம்பர்-06

என் வீதி என்ன உன் கழிப்பறையா? என்ற சென்னை மாநகராட்சியின் மாணவ தூதுவர்களின் சுகாதார விழிப்புணர்வு போஸ்டர் தலைநகர் மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

சென்னையின் சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகளை வலியுறுத்தி மாநகராட்சி மாணவியர் பங்கு பெற்ற மழைக்கால நோய்களை தடுப்போம் என்கிற விழிப்புணர்வு காணொலி அண்மையில் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் சென்னையில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘என் வீதி என்ன உன் கழிப்பறையா?’ ‘குப்பை தொட்டிக்கு அழகு’! ‘கொசுக்களை நசுக்குவோம்’! என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக என் வீதி என்ன உன் கழிப்பறையா? என்ற சுவரொட்டி பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சுவரொட்டிகள் மட்டுமின்றி மாநகரப் பேருந்துகளிலும் இதே விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு பிரச்சாரம், வீடுகளையும், வீதிகளையும், பொது இடங்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளன. 

மாநகராட்சியின் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற ஆட்டோக்கள் சென்னை மாநகராட்சி சென்னையின் 15 மண்டலங்களிலும் நாளைமுதல் இரண்டு நாட்களுக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்சாரம் நடைபெற இருப்பதாக தெரிகிறது.

மாநகராட்சி மாணவ தூதுவர்களின் பிரச்சார வீடியோ

சென்னையில் மழைக்காலத்தில் பரவும் நோய்களை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாநகர வீதிகளில் குப்பைகள் தேங்காமல் தடுக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

மாநகராட்சி மாணவ தூதுவர்களின் பிரச்சார வீடியோ

இதன் தொடர்ச்சியாக சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அடிப்படையில் சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘என் வீதி் என்ன உன் கழிப்பறையா?’, ‘குப்பை தொட்டிக்கு அழகு’!, ‘கொசுக்களை நசுக்குவோம்’! என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ சுகாதார தூதுவர்களை முன்னிறுத்தும் டிஜிட்டல் மற்றும் ஆட்டோ பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. 

இறுதியாக மாநகராட்சியின் 20,000 ஆயிரம் மாநகராட்சி மாணவ சுகாதார தூதுவர்கள் பங்குபெறும் தங்கள் பள்ளிகள் அருகாமையில் உள்ள வீதிவழி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு, மழைக்கால நோய்தடுப்பு என்று மாநகரை கலக்கி வரும் இத்தகைய நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களோடு இனைந்து மக்கள் பிரச்சனைகளுக்கு அரசின் தீர்வு என்கிற வகையில் செயல்பட்டுவரும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இதனை துவக்கி வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *