சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை: சரத்பவார் திட்டவட்டம்

மும்பை, நவம்பர்-06

மகாரஷ்டிரா மாநிலத்தில் சிவேசனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கப்போவதில்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே நாங்கள் செயல்படுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் 228 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது.

வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதற்கிடையே சிவேசனா தனது பிடியில் உறுதியாக இருந்து வருகிறது. மகாராஷ்டிரா மக்கள் சிவசேனாவில் இருந்து முதல்வராக ஒருவர் வருவதைத்தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உறுதியாக கூறியிருப்பது மேலும் சிக்கலை அதிகப்படுத்தியது. இந்த சூழலில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. எனக்கும் மீண்டும் முதல்வராகும் ஆர்வமும் இல்லை. நான் ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்துவிட்டேன் என்பதால், அந்த பதவிக்கு மீண்டும் வர விரும்பவில்லை.

மக்கள் எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே வாக்களித்துள்ளார்கள். அந்தவகையில் நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.

மாநிலத்தில் சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதை ஏற்று இரு கட்சியினரும் விரைவில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். இந்த ஒருவாய்ப்பு மட்டும்தான் இருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதைத் தவிர்க்க வேண்டும்.

சிவசேனாவும், பாஜகவும் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால், நாளை மீண்டும் பாஜகவுடன் இணக்கமாக சிவசேனா செல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே செயல்படுகிறோம். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி என்ன விதமான அரசியல் சூழல் எடுத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *