இணைகிறதா பாஜக-தமாகா: ஜி.கே.வாசன் பதில்

புதுடெல்லி, நவம்பர்-06

பாஜகவுடன் தமாகாவை இணைப்பது தொடர்பான கேள்விக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: கூட்டணிக் கட்சிகளின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை நான் அவரது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சினைகள் குறித்தும் பிரதமரிடம் விரிவாக எடுத்துக் கூறினேன். அதனை பிரதமர் பொறுமையாக கேட்டுக்கொண்டார். அவ்வப்போது என்னிடம் சந்தேகங்களைக் கேட்டார். அதற்கு நான் விளக்கம் அளித்தேன். தமிழகத்தின் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதனைப் பரிசீலனை செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன்.

அமித்ஷாவைச் சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?

அமித்ஷாவைச் சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த முறை அவரிடம் நேரம் கேட்கப்போவதில்லை. காரணம், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் அவரின் பங்கு முக்கியமாக உள்ளது. அதற்கடுத்த வாரங்களில் டெல்லி வரும்போது அவரைச் சந்திப்பேன். அவசரமாக சந்திப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை.

தமாகாவை பாஜகவுடன் இணைக்கப் போகிறீர்களா?

தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையுடன் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஐந்தாண்டு காலமாக படிப்படியாக இயக்கம் வளர்ந்துகொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் மாறும். மரியாதைக்குரிய கட்சியாக, மக்கள் விரும்பும் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படுகிறது.

எங்களின் வியூகமே, உள்ளாட்சித் தேர்தலில் மக்களுக்காக தமாகா நிர்வாகிகள் செயலாற்ற வேண்டும் என்பதுதான். தமாகா, பாஜகவுடன் இணைவதாக கூறுவது ஜோசியம், வதந்தி, பொய்யான செய்தி. அதில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு ஜி.கே.வாசன் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *