மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது யார்? – சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு

மும்பை, நவம்பர்-06

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கோரி வருகிறது.

வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்கிடையே சிவேசனா தனது பிடியில் உறுதியாக இருந்து வருகிறது. மகாராஷ்டிரா மக்கள் சிவசேனாவில் இருந்து முதல்வராக ஒருவர் வருவதைத்தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உறுதியாக கூறியிருப்பது மேலும் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் முழுமையான விவரங்கள் ஏதும் தெரியவில்லை. சந்திப்பு முடித்து வெளியே வந்த சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கேட்டபோது, மரியாதை நிமித்தமாக சரத்பவாரைச் சந்தித்தேன் வேறு ஏதும் இல்லை என்றார். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய ஆட்சி 8-ம் தேதிக்குள் அமையுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *