ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் தேவேந்திர பட்னாவிஸ் ரகசிய சந்திப்பு

நாக்பூர், நவம்பர்-06

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே ரகசியமான முறையில் நடந்த சந்திப்பு என்பதால், சந்திப்பின் விவரங்கள் குறித்து வெளியிடப்படவில்லை.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இந்த சூழலில் சிவசேனா முதல்வர் பதவி கேட்டு பிடிவாதமாக இருந்துவரும் நிலையில் பட்னாவிஸ், மோகன் பாகவத் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு 105, சிவேசனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன. இந்த சூழலில் தேர்தலுக்கு முன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா பிடிவாதம் காட்டி வருகிறது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக முறைப்படியான பேச்சுவார்த்தை நடக்காமலும், புதிய ஆட்சி அமையாமலும் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த சூழலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடந்ததால், இதில் என்ன பேசப்பட்டது, எதைப் பற்றிப் பேசினார்கள், என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *