மகனாக உருகிய சிவன் தாயாக தேற்றிய மோடி…

பெங்களூரு, செப்டம்பர்-7

லேண்டர் விக்ரம் விண்கலத்தின் தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.

சந்திரயான் நிலவில் தரையிரங்கும் காட்சியை காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்திருந்தார். இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் இதர விஞ்ஞானிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இந்த நிலையில், லேண்டர் விக்ரம் தரையிரங்குவதற்கு முன்பே அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் அனைவரின் முகத்திலும் கவலை சூழ்ந்தது. அந்த பகுதி முழுவதும் ஒரு அசாதாரண சூழ்நிலையே நிலவியது.

இதனையடுத்து, இஸ்ரோவின் தலைவர் சிவன் லேண்டர் விக்ரமிடம் இருந்து சிக்னல் வரவில்லை என்பதை பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள விஞ்ஞானிகளிடம் ஆறுதல் கூறிவிட்டு, பின்பு, தன்னுடன் தரையிரங்கும் காட்சியை காணவந்த மாணவ, மாணவிகளிடமும் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர், பிரதமர் மோடியிடம் எதிர்காலத்தில் தாம் பிரதமர் ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என கேள்வியெழுப்பினார். அத்தகையை சூழலில் மாணவரின் இந்த கேள்வி சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

லேண்டர் விக்ரம் தோல்வியடைந்ததை அடுத்து, விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இஸ்ரோவில் இன்று காலை 8 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றினார். தன்னுடைய உரையை முடித்துவிட்டு, அங்கு கூடியிருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் கைகுலுக்கி ஆறுதலும் கூறினார்.

இறுதியாக, பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தி அழுதார். இதனை பார்த்த பிரதமர் மோடி ஒரு தந்தை மகனை தேற்றுவது போல் கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றினார். இந்த காட்சி அங்கு உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *