ராஜராஜ சோழன் சதயவிழா: தஞ்சையில் கோலாகலம்

தஞ்சை.நவம்பர்.5

மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1034 வது ஆண்டு சதய விழா, தஞ்சை பெரியக்கோயிலில் கோலாகலமாக தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயில், சிற்பகலைக்கும், கட்டக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.  சோழப்பெருவேந்தன் அருண்மொழிவர்மன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

தமிழர்களின், பண்பாடு, கலை, ஆன்மிகம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் 1010-ம் ஆண்டு எழும்பிய பெரியக்கோயில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி தருகிறது.

பிரகதீஸ்வரர் ஆலயம், பெருவுடையார்கோயில், என்ற அழைக்கப்படும் பெரியக்கோயில் 1987 ம் ஆண்டு ஐ. நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி 1034 ம் ஆண்டு சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது.

விழாவையொட்டி தேவரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஓதப்பட்டன. தொடர்ந்து ராஜ ராஜ சோழனின் புகழைப்போற்றி இசை, நாட்டியம், பட்டிமன்றம், கருத்தரங்கம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.

விழாவில் முக்கிய நிகழ்வாக பெரிய கோவில் முன்பு உள்ள ராஜ ராஜ சோழன் சிலைக்கு நாளை தமிழக அரசு சார்பில் மாலை அணைவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

 ராஜராஜனின் பிறந்த நாளையொட்டி மூலவர் பெருவுடையாருக்கு 32 வகை திரவிய பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியக்கோவில் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. இதேபோல் ராஜராஜ சோழனின் சமாதி அமையப்பெற்றுள்ள உடையாளுரிலும் சதயவிழா கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *