வங்கக் கடலில் நாளை புயல் சின்னம்

சென்னை, நவம்பர்-05

அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்டல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை (நவ.6 ஆம் தேதி) இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆலங்குடியில் 2 செ.மீ., பேராவூரணி, அரிமலம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் இயல்பு மழை அளவு 22 செ.மீ. இந்த காலகட்டத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 8% அதிகமாகும். வரும் 2-3 தினங்களுக்கு குறிப்பிடத்தகுந்த மழை இருக்காது”.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்கள் நவ.5-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், மத்தியக் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் நவ.6, 7 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, நாகை, புதுவை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல, கடலூர், பாம்பன் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *