கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, நவம்பர்-04

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஏதுவாக விரிவுபடுத்தப்பட்ட அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை மாவட்டங்களுக்கு தலா 2 ஆம்புலன்ஸ்கள் கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் விதமாக, 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 இலவச அவசர கால்நடை மருத்துவ ஊர்திகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

முன்னதாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரிடம், அவசர ஊர்தியில் உள்ள சிறப்பு அம்சங்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விளக்கி கூறினர். கால்நடை வளர்ப்போர் இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பெற ‘1962’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். பெயர், தெளிவான முகவரி, கால்நடைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவை குறித்து முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பொறுத்து உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் அல்லது அந்தந்த மாவட்டத்தில் உள்ள அவசர ஊர்திகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *