சிவசேனாவுக்கு தான் முதல்வர் பதவி: சஞ்சய் ராவத்

மும்பை, நவம்பர்-05

மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக தான் இருப்பார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆனால் தேர்தலுக்குமுன் செய்த உடன்பாட்டின்படி ஆட்சியில் இரண்டரை ஆண்டு காலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவசேனா பாஜகவிடம் கோருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து மாநில அரசியல் குறித்து ஆலோசனை நடத்தினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதவியேற்க சிவசேனாவும், காங்கிரஸூம் ஆதரவளிக்கும் என பேசப்பட்டது. ஆனால் இதனை சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக தான் இருப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. மகாராஷ்டிராவின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவின் அரசியல் தற்போது மாறி வருகிறது. நீதிக்காகவே போராடி வருகிறோம் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *