அம்மா மினி கிளினிக்குகளை மூடிய திமுக அரசு.. பொங்கியெழுந்த எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க., ஆட்சியில், தற்காலிகமாக துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.தமிழகத்தில் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஈ.பி.எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜன-4

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘சென்னையில் தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அதற்கேற்ற ஆலோசனைகளை வழங்க சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகள் பெரிதளவு இல்லாத பட்சத்தில் மக்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு 2 முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் முடிவுகள் வந்திருப்பின் காத்திருப்பை முடித்து கொள்ளலாம். அதே நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவு காணப்படும் கோவை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக செயல்பட்டு வந்த 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த கிளினிக்களில் தற்போது சிகிச்சை கொடுக்கப்படவில்லை. அதனால் இதுவரை அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றி வந்த 1,800 மருத்துவர்களுக்கு விரைவில் மாற்றுப்பணியிடம் வழங்கப்படும். இது தவிர சென்னை வேப்பேரி பெரியார் திடலில், கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1,820 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையை மேற்கொள்வதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மட்டும் 22 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரே நாளில் மட்டும் 3.35 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *