பாஜகவுக்கு கறுப்பும், சிவப்பும் தேவை.. அண்ணாமலை அதிரடி

மதுரை, ஜன-4

காவியை வீழ்த்த கறுப்பு, சிவப்பு, நீலம்என எல்லா நிறங்களும் இணைய வேண்டும்’ என்று திமுக எம்.பி. ஆ.ராசா பேசியிருந்தார். இதுகுறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், ”கறுப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து பாஜகவைத் தோற்கடிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியிருக்கிறார். அவர் வேண்டுமானால் நிறத்தை வைத்து அரசியல் செய்யலாம். பாஜக அப்படி அல்ல. பாஜகவுக்கு கறுப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல அனைத்து நிறங்களும் தேவை. கறுப்பு, சிவப்பையும் நாங்கள் ஒதுக்கமாட்டோம். எல்லா மக்களையும் சேர்த்து அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. காங்கிரஸ் ஒரு காற்றடைத்த பலூன். அதனால்தான் ராகுல் காந்தி அவ்வப்போது எங்கேயாவது பறந்து சென்று விடுகிறார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி முடித்து வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகத்திலும் காங்கிரஸ் முடிவுக்கு வந்துவிடும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும் என வைகோ பேசியிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் சேர்ந்துதான் பாஜகவை எதிர்த்தன. ஆனால், என்ன ஆனது? அந்தத் தேர்தலில் பாஜகத்தான் வெற்றி பெற்றது. இதனால் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. பாஜகவைத் தோற்கடிக்க முடியாது. இது தெரிந்துதான் தற்போது உத்தரப் பிரதேசத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்திக்கின்றன” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *