பொங்கல் பரிசு பையில் மாறிய வாழ்த்து.! தமிழ்ப் புத்தாண்டு இல்லை… தமிழர் திருநாள்தான்..!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பையில் முன்பு இடம் பெற்றிருந்த ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்’ அகற்றப்பட்டு ‘தமிழர் திருநாள் வாழ்த்துகள்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, டிச-28

தமிழர்கள் பல ஆண்டுகளாக தை 1ம் தேதியை தமிழர் திருநாளாகவும், சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழ் புத்தாண்டு சட்டத்தை இயற்றினார். அதில், தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதல்வரான ஜெயலலிதா, தமிழ் புத்தாண்டை சித்திரை 1ம் தேதியாக அறிவித்து சட்ட மசோதாவை நிறைவேற்றினார்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றுவார்களோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு ரேஷன் கடைகள் வாயிலாக கொடுக்கப்படும் பொங்கல் பரிசு பையில் தமிழக அரசு முத்திரையுடன் ‘தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்ற, வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், மீண்டும் தமிழக அரசு தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த படங்கள் வெளியாகி தமிழர்களிடையே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தமிழ் புத்தாண்டு தினத்தை வைத்து மாறி மாறி அரசியல் செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அரசியல் கட்சியினரும் பொங்கல் தினத்தை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே வரும் ஜன.,3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பையில் இருந்து தமிழ் புத்தாண்டு எனக் குறிப்பிட்ட வாசகத்தை நீக்கியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள பை தொடர்பான படத்தில் பையின் இருபுறமும் தமிழக அரசு முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒருபுறம் உழவர்கள் மாடுகளுடன் பொங்கல் கொண்டாடும் படமும், மறுபுறம் ‘தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்’ என்ற வாசகத்துடன் ‛மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பொங்கல் பையில் தமிழ் புத்தாண்டை திமுக அரசு நீக்கியிருப்பதை பலர் வரவேற்றுள்ளனர். தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு, தமிழ்ப் புத்தாண்டு பெயரை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *