சென்னை பத்திரிகையாளர் யூனியனின் (MUJ) பொதுக்குழு கூட்டம்.. முக்கிய தீர்மானங்கள்

சென்னை பத்திரிகையாளர் யூனியனின் (MUJ) 67 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் (26-12-2021) ரிட்சி தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 2021 ஆம் ஆண்டுக்கான வேலை அறிக்கை மற்றும் வரவு – செலவு அறிக்கையை பொதுச்செயலாளர் எல்.ஆர்.சங்கர் தாக்கல் செய்தார். அவை பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அடுத்து, ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலாவதாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன், “செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும்” என அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றுத் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். பத்திரிகை மற்றும் ஊடகவியாலளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புகள், ஊடகத்துறையினரின் கொரோனா கால துயரங்களை குறைத்து நம்பிக்கை அளிக்கக் கூடியதாக அமைந்தது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசு அங்கீகார அட்டை வைத்திருக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் சேர்க்கப்பட்டதுடன், இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான வருமான உச்சவரம்பில் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற்றது என ஊடகத்துறைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

முத்தமிழறிஞர், காலம்சென்ற கலைஞர் கருணாநிதி அவர்கள், உச்ச பதவிகளை அடைந்த போதும் தன்னைப் பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்பட்டவர். அவருடைய தொடர்ச்சியாக, அவர் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுக்குழு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர் குழுவிலும், பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவிலும் சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

ஓய்வூதியம் கேட்டு ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் பலர் விண்ணப்பித்துள்ளனர். பணிக்காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் பல நிவாரணத்தொகை கோரி விண்ணப்பித்துள்ளன. இவற்றை எல்லாம் தமிழக அரசு விரைவாக பரிசீலித்து தீர்வுகாண வேண்டும் என பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

அடுத்து, ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் பணியிடப் பாதுகாப்பு மற்றும் பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை பத்திரிகையாளர் யூனியன் சார்பில் ‘உள்ளக புகார் குழு’ அமைக்கப்படும். ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவில், பெண் பத்திரிகையாளர் இருவர், பெண்ணிய செயல்பாட்டாளர் ஒருவர், ஆண் பத்திரிகையாளர் ஒருவர், ஆண் வழக்குரைஞர் ஒருவர் இடம்பெறுவர் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

சென்னை பத்திரிகையாளர் யூனியன் நிர்வாகிகள் தேர்தலை உடனடியாக நடத்துவது என்றும், இதற்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *