சண்டையில் எந்த சமரசமும் இருக்காது.. சிறையில் இருந்து வெளியானதும் மாரிதாஸ் அதிரடி பேச்சு

மதுரை, டிச-25

மதுரையைச் சேர்ந்த பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ், குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தலைமை தளபதி பிவின் ராவத் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக, தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆனால், இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்த வேளையில் தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்திலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது, கொரோனா காலத்தில் தப்லீக் ஜமாத் தொடர்பாகவும் இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டதாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திலும் ஒரு வழக்குப் பதிவாகியிருந்தது. அந்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் மேலப்பாளையத்தில் பதிந்த வழக்கையும் ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில், ஜாமீன் கோரி மாரிதாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் நீதிமன்றம் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மாரிதாஸ் மீதான இரு வழக்குகள் ரத்தான நிலையில், இன்னொரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததால், மாரிதாஸ் சிறையிலிருந்து விடுதலையானா். அவரை பாஜகவினர், இந்து மக்கள் கட்சியினர், இந்து முன்னணி உள்பட இந்து அமைப்பினர் சிறை வளாகத்தில் வரவேற்றனர். இதற்கிடையே அவர் விடுதலையாகி வெளியே வந்தபோது வரவேற்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மாரிதாஸ். அதோடு, ‘சண்டையில் எந்த சமரசமும் இருக்காது – மாரிதாஸ்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *