தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்கினார் ஜெகன் மோகன் ரெட்டி தங்கை ஷர்மிளா

ஐதராபாத், ஜூலை-9

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் பெயர் ‘ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி’ என்பதாகும். தன் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளில் கட்சியை தொடங்கியிருக்கிறார்.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறும் வகையில் ஷர்மிளா தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு போட்டியாக ‘ஓய்எஸ்ஆர் தெலங்கானா’ என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரசேகர ராவ் நிறைவேற்றாத காரணத்தினால், புதுக் கட்சியை தொடங்கி, தந்தையின் நல்லாட்சியை அமைக்கப் போவதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

கட்சியை தொடங்கி வைத்த பின்னர் ஷர்மிளா பேசுகையில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கம் தனது வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டதால், தெலுங்கானா மக்களின் கனவுகள் முழுவதும் சிதைந்துவிட்டதாக கூறினார். ‘உபரி பட்ஜெட்டைக் கொண்ட மாநிலத்தில், ஏழை குடும்பத்தினர் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், தனியார் / கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். தெலுங்கானாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகர ராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை. சந்திரசேகர ராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு செல்வச்செழிப்புடன் இருக்கிறது’ என்றும் ஷர்மிளா குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *