தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தமிழ்நாட்டில் முதலாவதாக கடலூர் மாவட்டம் பென்னாடம் பகுதியில் கர்ப்பிணிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திடும் பணியை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, ஜூலை-3

இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மே-7 பொறுப்பேற்ற நாளில் கரோனாத் தொற்றின் அளவு 26,465. மே-21 அன்று உச்சத்தைத் தொட்ட கரோனாத் தொற்றின் அளவு 36,184. தடுப்புப் பணிகள் முன்னெச்சரிக்கை பணிகளில் செவ்வனே செயல்பட்டதின் காரணமாக நேற்றையத் தினம் 2-7-2021 அன்று 4,230 என்று தொற்றின் அளவு தமிழகத்தில் குறைந்துள்ளது.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 57 நாள்களில் 29 மாவட்டங்களுக்குச் சென்று கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.

அந்தவகையில் இன்று கடலூர் மாவட்டத்தில் 30வது மாவட்டமாக ஆய்வு மேற்கொண்ட வகையில் இன்று (03-07- 2021) தமிழ்நாட்டில் முதலாவதாக பென்னாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் பணியினை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வரின் தீவிர நடவடிக்கையின்படி தடுப்பூசி செலுத்திடும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நிலவரப்படி 1.50 கோடிக்கு மேல் தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு இதுவரை வரப்பெ ற் ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,57,76,550. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,52,00,785. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6,41,220 ஆகும்.

மத்திய அரசிடமிருந்து ஜூ மாதத்திற்குரிய தொகுப்பான 71 லட்சம் தடுப்பூசிகள் படிப்படியாக வரப்பெற்று தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. நேற்றிரவு ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒன்றிய அரசிடமிருந்து கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு பிறகு இன்று (03-7-2021) தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டம், பென்னாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திடும் பணியை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

அநேகமாக இந்தியாவிலேயே முதன்முதலாக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி பென்னாடம் பகுதியில்தான் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசி போடும் பணியை முதன்முதலில் தொடங்கி வைத்த பெருமை உதயநிதி ஸ்டாலினையே சாரும்.

18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,230 ஆகும். மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இத்தொற்றிலிருந்து மீண்டு, நலமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை 4,952 ஆகும்.

தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, தொற்றின் அளவு குறைந்துகொண்டே சென்றாலும், ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நேற்று 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால் 1.50கோடி பேருக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் தடுப்பூசி செலுத்துவது குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகப் பெரிய அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசிமுகாம், கட்டடத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம், விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி முகாம், அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் என்று தாமே முன்னின்று தொடங்கி வைத்திருக்கிறார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமது சட்டமன்றத் தொகுதியில் 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியினை துரிதப்படுத்தி முடித்துள்ளார். அதேபோல் 97 ஆயிரத்திற்கும் மேல் உள்ள தமிழக வழக்கறிஞர்களுக்கான தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *