கர்ப்பிணிகளும் இனி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி, ஜூலை-2

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கர்ப்பிணிகள் விஷயத்தில் மத்திய அரசு இத்தகைய முடிவை எடுக்கவில்லை.

கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினாலும் கூட, பாதுகாப்பு குறைபாடு மற்றும் போதிய தகவல்கள் இல்லாததால் இந்த விஷயத்தில் இம்மாத துவக்கத்தில் மத்திய அரசு சில இடைக்கால வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. அதில், கொரோனா தாக்கும் அதிக அபாயம் உள்ள கர்ப்பிணிகள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடலாம் என கூறியிருந்தது. இதனிடையே ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இதன்படி, அனைத்து கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில் கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை முதன்முறையாக அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனையை ஏற்று கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முடிவு குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கினால் கர்ப்பிணிகள் உடல்நிலை அதிகம் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் கொரோனா தொற்றால் கர்ப்பிணிகளுக்கு வேறு தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *