கோவையில் சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோ: அமைச்சர் S.P.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை, நவம்பர்04

கோவை மாநகரில் பாதாளச் சாக்கடை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான ரோபோ இயந்திரத்தின் செயல்பாட்டை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை துவங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி ஆா்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கோவை மாநகராட்சியில் 29 நபா்களுக்கு, கருணை அடிப்படையில், வாரிசுதாரா்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் ரூ. 36 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட பாதாளச் சாக்கடை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றும் ரோபோ இயந்திரத்தின் பயன்பாட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கொசுப்புழு ஒழிப்பான் இயந்திரங்களின் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தாா்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில் 475 மனுக்கள் அளிக்கப்பட்டன. அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மகளிா் திட்டத்தின் கீழ் 17 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61.09 லட்சம், இருசக்கர வாகனங்களுக்கான மானிய திட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ. 4.25 லட்சம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 97 பயனாளிகளுக்கு ரூ.11.64 லட்சம், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ.52.64 லட்சம், தாட்கோ மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.27.72 லட்சம் உள்பட 419 பயனாளிகளுக்கு ரூ. 6.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, வருவாய்த் துறை அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *