அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு புகார் குறித்த வழக்கில் 3வது நீதிபதி நியமனம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்த சொத்துக்குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமாரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜூன்-26

மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில் அமைச்சராக இருந்த போது ராஜேந்திரபாலாஜி குறிப்பிட்ட சொத்துக்களை கணக்கு காட்டி அதிகளவில் சொத்து சேர்த்ததாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கில், கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்துக்குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்குப் பதிந்து விசாரிப்பது ‘செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது’ போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்விதப் பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தார்.

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக எம்.நிர்மல்குமார் இன்று (ஜூன் 26) நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்துத் தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *