சாத்தான்குளம் கொலை நடந்த அதே நாளில் வணிகர் கொலை.. ஒரு கோடி கொடுங்க – டாக்டர் ராமதாஸ் ட்வீட்

சேலத்தில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட வணிகர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சேலம், ஜூன்-24

சேலம் மாவட்டம் பாப்பநாய்க்கன்பட்டி சோதனை சாவடியில் நேற்று மாலை இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசனை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வணிகர் முருகேசன் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக்கூடாது!வணிகர் முருகேசன் தாக்கப்படும் காட்சிகள் மனதை பதற வைக்கின்றன. தம்மை தாக்க வேண்டாம் என்று முருகேசன் கதறும் போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி நடுசாலையில் வைத்து தாக்குவது மிருகத்தனமானதாகும். அதை மன்னிக்க முடியாது!
சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு அதே நாளில் வணிகர் முருகேசன் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட வணிகர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *