வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எப்போது? – சட்டசபையில் முதல்வர் பதில்

சென்னை, ஜூன்-24

தமிழக சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார். இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

“தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.

ஏற்கெனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு, பாமகவின் நிறுவனர் ராமதாஸ், இவர் மூலமாக ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார். அதிலே அவர் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நிறைவாகக் குறிப்பிடுகிறபோது, ‘தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும்’ கேட்டிருக்கிறார்.

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம்.

ஆகவே, உறுப்பினருடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *