பாஜகவை வீழ்த்த புதிய அணி… சரத்பவார் வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை

டெல்லி, ஜூன்-22

2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஈடுபட்டுள்ளார். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நேற்று மீண்டும் சந்தித்து பேசியதால், இது 2024 பாராளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. மூன்றாவது அணி தொடர்பான முயற்சி என்றும் பரபரப்பு தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக சரத் பவார் வீட்டில் இன்று எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. ஷா, முன்னாள் தூதர் கே.சி.சிங் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்தார். இக்கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணியை உருவாக்குவது குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டம் 2024 பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு அடித்தளம் அமைக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின், தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் அளித்த யோசனைப்படி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ராஷ்டிர மஞ்ச் என்ற ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசியலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திப்பதும், இந்தக் கூட்டணிக்கு தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி தலைமையேற்பதுமே தற்போதைய திட்டம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *