கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயார்.. சட்டசபையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிரடி

சென்னை,ஜூன்-22

இது தொடர்பாக சட்டசபையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இந்த அரசு கடந்த மாதம் 7-ந்தேதி பதவி ஏற்கும்போது கொரோனா தொற்று 26 ஆயிரத்து 468 ஆக இருந்தது. 10 நாளில் 36 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தது. முதல்-அமைச்சர் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. முதல்- அமைச்சராக தளபதி பதவி ஏற்ற அன்றே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

பின்னர் பிரதமரிடம் நேரடியாகவும் பேசினார். கடந்த 17-ந்தேதி பிரதமரை சந்தித்தபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். தமிழ்நாட்டில் தடுப்பூசி மையங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தினார்.முதல்-அமைச்சர் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு 7 ஆயிரத்து 427 என்ற அளவுக்கு வேகமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாளில் கொரோனா தொற்று முற்று பெறும்.

முதல்வர் கோவைக்கு சென்றபோது தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கே சென்று கொரோனா பாதித்தவர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டினார்.தடுப்பூசியை பொறுத்தவரை அடுத்த மாதம் 71 லட்சம் தருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசி தர வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். விரைவில் அனைவரும் தடுப்பூசி போட்ட மாநிலமாக தமிழகம் மாறும்.

கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் 2 ஆயிரத்து 510 பேரை தாக்கி உள்ளது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் இதற்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 130 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். கடந்த ஒன்றரை மாதத்தில் 79 ஆயிரத்து 618 புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொரோனா 3-வது அலை வரக்கூடாது என நினைக்கிறோம். அப்படியே வந்தாலும் அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *