நீட் தேர்வு உண்டா? இல்லையா?.. சட்டசபையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரி கேள்விகள்

சென்னை, ஜூன்-22

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் தொடங்கியது. அப்போது, முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஒரு எதிரி கட்சியாக அல்லாமல் பிரதான எதிர்க்கட்சியாக நல்ல பல திட்டங்களை வரவேற்றும், அரசுக்கு நல்ல கருத்துக்களை சுட்டிக்காட்டும் வகையிலும் சிறப்பாக செயல்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் நான் சில கருத்துக்களை எடுத்து வைக்கிறேன்.

எல்லோருடைய சிந்தனையும் போல் கொரோனா தொற்று நீங்க வேண்டும் என்ற கால கட்டத்தில் சட்டசபை கூடியுள்ளது. என்று தணியும் இந்த கொரோனா தொற்று என்ற கேள்விதான் மக்கள் மனதில் உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனாவை களத்தில் நின்று எதிர் கொண்டு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுவது பொருத்தமாக இருக்கும்.

கொரோனாவுக்கு கடந்த ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்காத சூழ்நிலையிலும், அம்மா அரசு அதை திறம்பட எதிர்கொண்டது. அன்று வலுவான சுகாதார கட்டமைப்பை அம்மா அரசு சார்பில் உருவாக்கி காட்டினோம். போர்க்கால அடிப்படையில் செயல்பட்டோம். கொரோனா முதல் அலையை திறம்பட எதிர்கொண்டு பல உயிர்களை காப்பாற்றினோம்.

தேர்தல் கால கட்டத்தில் 26.2.2021 அன்று 481 இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தேர்தல் முடியும் காலத்தில் 26 ஆயிரத்து 480 என்ற அளவுக்கு உயர்ந்தது. இது ஆளும் கட்சிக்கு சவால்தான். இன்று 7 ஆயிரத்து 427 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. என்றாலும் இன்னும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சென்னையில் ஊரடங்கு தளர்வு காரணமாக பொது போக்குவரத்து தொடங்கி உள்ளது. எனவே இன்னும் கவனமாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கொரோனா 3-வது அலை வரும் என்று எய்ம்ஸ் டைரக்டர் கூறியுள்ளார். 3-வது அலை வருமா? என்ற விவாதத்துக்குள் செல்ல வேண்டாம். 3-வது அலை வரும் என்ற எண்ணத்தில் அரசு செயல்பட வேண்டும். அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

2 லட்சம் குழந்தைகள் 3-வது அலையின்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை வரும் என கணக்கிடுகிறார்கள். எனவே அரசு கூடுதலாக படுக்கைகளை உருவாக்க வேண்டும். நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்தாகும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்.

இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்று மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசின் நிலைப்பாடு என்ன என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *