காதலி கண் முன்னே காதலன் கொலை.. காதலி குடும்பத்தினர் கைது..!

நத்தம் அருகே காதலியை அழைத்துச் செல்ல முயன்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் அண்ணன்கள் என 4 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

நத்தம், ஜூன்-22

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள புதுப்பட்டி கைபைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா(21). கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையிலுள்ள தனியார் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நத்தம் அடுத்துள்ள மூங்கில்பட்டி முல்லை நகரைச் சேர்ந்த ராசு மகள் பரமேஸ்வரி(20). பாரதிராஜாவும், மகேஸ்வரியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்த ராசு, பரமேஸ்வரியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜாவிடம் பரமேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா, பரமேஸ்வரியை அழைத்துச் செல்வதற்காக தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு முல்லை நகருக்கு சென்றுள்ளார்.

செல்போனில் தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடத்திற்கு காதலியை பாரதிராஜா வரவழைத்தார். பின் இருவரும் டூவீலரில் தப்பினர். சிறிது தூரம் சென்றதும் டூவீலர் பழுதாகி விட்டது. பழுதை பாரதிராஜா சரி செய்து கொண்டிருந்தார். அப்போது பரமேஸ்வரியை தேடி வந்த அவரது பெற்றோர், அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த பரமேஸ்வரி, பாரதிராஜாவை மடக்கினர். அப்போது மலைச்சாமிக்கும், பாரதிராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த மலைச்சாமி, கல்லை எடுத்து பாரதிராஜாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு ஆம்புலன்சில் ஏற்றியபோது அவர் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார், பாரதிராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரமேஸ்வரின் பெற்றோர், அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர், பாரதிராஜாவை தாக்கி கொலை செய்ததாக பரமேஸ்வரியின் தந்தை ராசு(63), தாயார் அழகுநாச்சி(58), அண்ணன்கள் மலைச்சாமி(33), பாலகுமார்(28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். காதலியின் கண் முன்பு காதலன் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *