கேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு

டெல்லி, ஏப்ரல்-7

கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சியின் ஆயுள்காலம் ஜூன் 1ல் முடிகிறது. 140 இடங்களை கொண்டுள்ள கேரள சட்டசபைக்கு தமிழக சட்டசபை தேர்தலுடன் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதேபோல், அங்கு காலியாக இருந்த மலப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு 140 இடங்களுக்கு 957 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

140 சட்டசபை தொகுதிகளிலும், மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்காளர்கள் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி முக கவசத்துடன் வந்து, கையுறை அணிந்து வாக்குப்பதிவு செய்தனர். கேரளாவில் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. முடிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதேபோல், முதல் மந்திரி சர்பானந்தா சோனாவால் தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்துள்ள அசாமுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3-ம் கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது.

ஒரு சில சிறு சம்பவங்களைத் தவிர மாநிலம் முழுதும் எவ்வித அசம்பாவிதமின்றி அமைதியாக தேர்தல் நடந்தது. மொத்தம், 82.28 சதவீத ஓட்டுகள் பதிவாயின என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். அரசு அமைந்துள்ள மேற்கு வங்காளத்துக்கு 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முந்தைய இரண்டு கட்டங்களைப் போலவே மூன்றாம் கட்டத் தேர்தலிலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 30 தொகுதிகளில் நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. அங்கு மொத்தம் 77.68 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *