தமிழக சட்டப்பேரவை தேர்தல்.. 71.79% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-6

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:-

“வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தற்போது வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீலிட்டு அதை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பும் முக்கியப் பணியில் உள்ளனர். அதனால் போனில் வாங்கிய தகவல் அடிப்படையில் தற்போதைக்கு வாக்குப்பதிவு நிறைவு குறித்த தோராய எண்ணிக்கையை வாங்கியுள்ளோம். சரியான வாக்குப்பதிவு குறித்த எண்ணிக்கை தெரிய நள்ளிரவு 1 மணி வரை ஆகும்.

தற்போது தோராய வாக்குப்பதிவு சதவீதத்தின்படி தமிழகத்தின் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை முடிந்த சதவீதம் 71.79 சதவீதம் ஆகும். அதிகபட்ச வாக்குப்பதிவு கள்ளக்குறிச்சி 78 சதவீதம், அடுத்து நாமக்கல் 77.91 சதவீதம், அடுத்து அரியலூர் 77.88 சதவீதம். குறைந்தபட்சமாக வரும் மாவட்டங்களில் முதலிடம் சென்னை 59.40 சதவீதம், அடுத்து செங்கல்பட்டு 62.77 சதவீதம், அடுத்து நெல்லை 65.16 சதவீதம் ஆகும்.

இவை தோராய சதவீதம் மட்டுமே. நாளை முழுமையான நிலவரம் வரும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் புகார் ஆகவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படாததால் வாக்குப்பதிவை நிறுத்தும் எந்தப் புகாரும் எழவில்லை. வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தூக்கிச் சென்றதாக எந்தப் புகாரும் இல்லை.

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததால் நாளை முதல் தேர்தல் பறக்கும் படை, பணம் பறிமுதல் போன்றவை எதுவும் இருக்காது. ஒருசில கட்டுப்பாடுகள் மட்டும் இருக்கும். அதை நாளை சொல்லுவோம். மற்றபடி பணம், நகை கொண்டுபோகும் கட்டுப்பாடுகள், சோதனை இனி இல்லை.

தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன. அங்கு 3 அடுக்குப் பாதுகாப்பு உள்ளது. முதல் வரிசையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள், அடுத்து மாநில போலீஸார் இருப்பார்கள். இது தவிர சிசிடிவி கேமராக்கள், கரண்ட் கட் ஆனால் சமாளிக்க ஜெனரேட்டர் வசதி உண்டு. அரசியல் கட்சிகள் அவர்களது ஏஜெண்டுகள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கலாம். அந்த அளவுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம்.

இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் அளித்து நல்லவிதமாக நடந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் நன்றாக ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். இது நல்ல சதவீதம். இது இன்னும் கூடும். நாளை முழு வாக்குப்பதிவு சதவீதம் வரும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை விடுவிப்பது குறித்து அந்தந்தத் துறைகள் மட்டுமே முடிவு செய்யும் எங்களுக்குச் சம்பந்தமில்லை”.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *