வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் நீக்கம்

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதால் அந்த இல்லத்தில் வசித்த அவருடைய தோழி சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-5

ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சசிகலா வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போயஸ்கார்டன் இல்லத்தில் தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஓட்டு இருந்தது. இந்தநிலையில், போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே.சசிகலாவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி உள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு அளித்திருந்தார்.

இதேபோல், வேதா இல்லத்தில் வசித்த அனைவருடைய வாக்குகளும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆயிரம் விளக்கு தொகுதி அமமுக வேட்பாளர் வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.ஆயிரம் விளக்கு தொகுதியில் சசிகலா, இளவரசியின் பெயர்கள் மட்டுமல்லாது, 19 ஆயிரம் அமமுக தொண்டர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் முறையிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *