உதயநிதியைப் பற்றி பேசினால் ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகிறது.. அமித் ஷா கிண்டல்

நான் உதயநிதியைப் பற்றி பேசும்போதெல்லாம், ஸ்டாலின் கோபப்படுகிறார். அவரது பிபி (ரத்த அழுத்தம்) உயர்கிறது என அமித்ஷா கூறினார்.

நெல்லை, ஏப்ரல்-3

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருநெல்வேலியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், நான்குனேரி வேட்பாளர் தச்சை என்.கணேசராஜா ஆகியோரை ஆதரித்து தச்சநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா மேலும் பேசியதாவது:-

பழம்பெருமை வாய்ந்த தாமிரபரணி பாய்ந்தோடும் திருநெல்வேலி மண்ணிற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அருள்மிகு நெல்லையப்பர் அருள்பாலிக்கும் பொன்னான பூமி இது. விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்த பூலித்தேவன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், வ.உ.சிதம்பரம்பிள்ளை, மாவீரன் சுந்தரலிங்கம், வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் வாழ்ந்த மண். இங்கு மக்களால் போற்றப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரையும் நினைவுகூருவது முக்கியம்.

தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடும்ப ஆட்சிக்கு வாய்ப்பு கொடுக்காமல் எம்.ஜி.ஆர். ஆட்சி தொடர்ந்திட மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் உயரிய பிரதமர் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நரேந்திரமோடி. அதேபோல விவசாய குடும்பத்தில் பிறந்து முதல்வராக தேர்வு பெற்றவர் எடப்பாடி கே.பழனிசாமி. ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் கடந்த 4 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அதிகார மையத்தில் இருந்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் தன் மகனைப்பற்றி மட்டுமே கவலை கொள்கிறார். தன் மகனை முதல்வராக்குவது பற்றி யோசிக்கிறார். மாநிலத்தைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? அல்லது மகனை முதல்வர் ஆக்க நினைக்கும் நபருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று தமிழக மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

நான் உதயநிதியைப் பற்றி பேசும்போதெல்லாம், ஸ்டாலின் கோபப்படுகிறார். அவரது பிபி (ரத்த அழுத்தம்) உயர்கிறது. பின்னர் அவர் தனது அமைதியை இழந்து யாரைப் பற்றியாவது பேசுகிறார். இறந்த தலைவர்கள் குறித்து ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

பிரதமர் மோடி, பாஜக மற்றும் அதிமுக தலித்துகளின் எண்ணங்களை புரிந்துகொள்கிறார்கள். பாஜக தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்தது. கட்சியின் இந்த மாநிலத் தலைவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவே உழைத்து வருகிறார். செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் நடக்கும் யுத்தமே இப்போதைய சட்டப்பேரவைத் தேர்தல். இறந்தவர்கள் குறித்து நிந்திப்பது தமிழர்களின் மரபு கிடையாது. ஆனால், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் குறித்து திமுகவினர் பேசியிருப்பது கலாசார மீறலாகும். இதேபோல முதல்வரின் தாயார் குறித்தும் அவதூறாகப் பேசியிருப்பது சரியானதல்ல.

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தால் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது. தமிழகத்தில் பள்ளர் உள்ளிட்ட 7 உள்பிரிவினர் தங்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை வெளியிட வலியுறுத்திவந்தனர். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு அதற்கான சட்ட மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தது. அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டன. இருந்தாலும் பாஜக அந்த மசோதாவை நிறைவேற்றி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழி செய்துள்ளது. ஏற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மக்களுக்கான ஆட்சியாக பாஜகவும், அதிமுகவும் உள்ளது. தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை உலக அரங்கில் சிறப்பாகப் பறைசாற்றியது மத்திய அரசு. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற அதிமுக சிறப்புச் சட்டத்தை இயற்றியதோடு, அதனை பாஜகவும் ஆதரித்தது. ஆனால், மீண்டும் காங்கிரஸ்-திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து விடுவார்கள். பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றது முதல் இந்திய மீனவர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை.

அண்டை நாடுகளால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள், உடமைகள் மீட்கப்பட்டுள்ளன. உலகில் எந்த சக்தியும் இந்திய மீனவர்களை தொட்டுப்பார்க்க முடியாத அளவுக்கு மத்திய அரசு பாதுகாப்புடன் செயல்படுகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு ஏராளமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கிராமப்புற வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி போன்றவை அதிமுகவின் சிறந்த திட்டங்களாகும்.

தமிழகத்தில் சாலை பணிகள், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ராணுவத் தளவாட உற்பத்தி கூடங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து வருங்காலத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும். ஊழல், குடும்ப ஆட்சியை வீழ்த்த திமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *