சேலம் கால்நடைப்பூங்கா: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, நவம்பர்-04

சேலம் தலைவாசலில் அமையவுள்ள நவீன கால்நடைப் பூங்கா தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். 

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்புத்துறைக்குச் சொந்தமான 900 ஏக்கர் நிலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த மிகப்பெரிய பூங்கா அமைய உள்ளது. நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை இந்த வளாகத்தில் அமைகின்றன.

இதுதவிர மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பினக் காளைகளின் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இதே வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கால்நடைப்பூங்கா அமைக்கும் பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *