ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு.. தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டனம்

சென்னை, ஏப்ரல்-2

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜனதா பயன்படுத்துகிறது.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் மோகன் உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதன் மூலம் தி.மு.க.வை முடக்கி விடலாம் என்று பா.ஜனதா பகல் கனவு காண்கிறது.இத்தகைய அடக்கு முறையை எதிர்கொள்கிற பேராண்மை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை. இந்த சோதனையை வன்மையாக கண்டிக்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

“ஆளும் கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் தேர்தல் தோல்வி பயத்தில் இன்றைக்கு திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருமுகமாகத்தான் திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த அச்சுறுத்தலுக்கு திமுகவும், திமுக கூட்டணிக் கட்சிகளும் ஒருபோதும் பணியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் திமுகவின் பணிகள் பின்தங்கிவிடும் என்று எண்ணினால் அவர்கள் எண்ணம் ஏமாற்றத்தில் தான் முடியும்.

தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய போக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் உரிய பாடத்தை அவர்கள் கற்பிப்பார்கள். இவ்வாறு அச்சுறுத்தும் போக்கை அவர்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்தப் போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிமுக அதன் கூட்டணியினர் எவ்வளவு தாராளமாக பணப் புழக்கத்தைச் செய்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. தேர்தல் ஆணையமும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்ற வருமான வரித்துறை சோதனைகள் செய்யும் துறைகளுக்கு இது தெரியாமல் இல்லை.

ஆனால், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சியினர் வீட்டில் போய் ரெய்டு செய்வது மிக மோசமான அநாகரிகமான ஒரு நடவடிக்கை. இந்த போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனால் திமுகவின், திமுக கூட்டணிகளின் வெற்றி ஒருபோதும் பாதிக்காது”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. தோல்வி பயத்தால் மற்ற கட்சிகளை அதிகார பலம் கொண்டு அடக்க பார்க்கிறது. ஆனால் மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறும்போது, ஐ.டி. சோதனை பா.ஜனதா அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை. இதனால் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்றார்.

அரசியல் லாபத்துக்காக வருமான வரித்துறையை ஏவல் துறையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஏப். 02) வெளியிட்ட அறிக்கை:

“திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தனது அரசியல் லாபத்துக்காக வருமான வரித்துறையை ஏவல் துறையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் சென்னை நீலாங்கரை வீடு, மருமகன் சபரீசனுக்குச் சொந்தமான 5 இடங்கள், அண்ணா நகர் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான மோகனின் மகன் கார்த்திக் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது.

மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வருவார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளில் மக்கள் தெள்ளத் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, தேர்தலில் தோல்வி பயம் தெரிவதாலேயே வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்தலாம் என்று நினைக்கின்றனர்.

அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. தேர்தலில் வாக்களிக்க அதிமுகவினர் பணம் கொடுப்பதை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் தமிழ்நாடு மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்துவது திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியையும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு படுதோல்வியையும் கொடுக்கும். அதிமுக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனையே சாட்சி”.

இவ்வாறு காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *