கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

கரூர், ஏப்ரல்-2

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில் பாலாஜி இத்தேர்தலில் கரூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வி.செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கரூரிலும் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று காலை முதல் சுமார் 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

திமுகவிலிருந்து விலகி, 2000-ஆவது ஆண்டில் அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி, அமைச்சர், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரனின் ஆதரவாளராகி, பிறகு 2018-ஆம் ஆண்டில் மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார்.

கரூர் அருகேயுள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு, ராயனூரில் உள்ள திமுக கரூர் மேற்கு நகர பொறுப்பாளர் சரவணன், கொங்கு மெஸ் மணி ஆகியோரின் வீடுகளில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வருமானவரித்தறையினர் இன்று (ஏப். 2ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகினறனர்.

வருமான வரித்துறை சோதனையையொட்டி ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் வீடு, ராயனூரில் சரவணன் வீடு, கொங்கு மெஸ் மணி ஆகியோர் வீடுகள் முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *