வருங்கால தலைமுறை மகிழ்ச்சியாக இருக்க அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.. ஓ.பி.எஸ். பேச்சு

வருங்கால தலைமுறைகள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைய வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை, ஏப்ரல்-2

மதுரையில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது;-

வர இருக்கின்ற தேர்தல் மக்கள் சக்திக்கும், தீய சக்திக்கும் நடக்கிற தேர்தல். தி.மு.க.வை வேண்டாம் என மக்கள் முடிவு செய்யும் தேர்தல். அம்மாவின் ஆட்சி தான் மீண்டும் வேண்டும் என மக்கள் கூறும் தேர்தல். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க. மற்றும் காங்கிரசுக்கு மக்கள் 10 ஆண்டு வனவாசம் கொடுத்து விட்டனர்.

தி.மு.க.வை மக்கள் கைவிட்டு விட்டனர். காங்கிரசை எப்போதோ கைவிட்டுவிட்டனர். பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா வல்லரசாக உயர்ந்துள்ளது. அவர் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். குறிப்பாக 11 மருத்துவக்கல்லூரிகள், மதுரையில் ரூ.1,500 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை துணை புரிந்துள்ளார்.

வருங்கால தலைமுறைகள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைய வேண்டும். மக்களின் வெற்றி சின்னமான இரட்டை இலை, தாமரை, மாங்கனி போன்றவற்றுக்கு வாக்களித்து அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *