திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை, நவம்பர்-04

தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி அவமதித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள் யார் என கண்டெறிந்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன்:

இதுதொடர்பாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், இது திருவள்ளுவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல; ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்ட அவமானம் என்று விமர்சித்தார். இந்த செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசிய பெரியக்கத் தலைவர்:

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய பெரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமம் என்பதால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட காரணமான விஷமிகளை உடனே கண்டறியலாம் என பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்:

திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன்:

திருவள்ளுவர் சிலையை அவமதித்திருப்பது அநாகரிகமான போக்கு. அம்பேத்கர், பெரியார் சிலைகளை அவமதித்த பிற்போக்கு சக்திகள், இப்போது திருவள்ளுவர் சிலையையும் அவமதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. திருவள்ளுவரையேஅவமதிக்கும் செயலுக்கு தமிழ்நாடு சென்றிருக்கிறது என்பது, ஜனநாயக சக்திகள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இதற்காக தமிழர்கள் அனைவருமே வெட்கப்பட வேண்டும்.

அவமதித்தவர்கள் யாராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்,. இதனை அலட்சியப்படுத்தக் கூடாது. வழக்கம்போல காலம் தாழ்த்தக் கூடாது. அல்லது தகுதியற்ற ஒருவரை அவர் மனம்பிறழ்ந்து செய்தார் என, திசைதிருப்பக் கூடாது. திருவள்ளுவரின் நன்மதிப்புக்கு கேடு விளைவிக்கும் அளவுக்குச் செயல்பட்டதற்காக பாஜகவைச் சார்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

வி.சி.க. எம்.பி. ரவிக்குமார்:

திருவள்ளுவர் தமிழ் சமூகத்தின் அடையாளம். அவர் தான் தமிழ் மொழியின் குறியீடாக பார்க்கப்படுகிறார். உலகம் முழுவதும் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்திருப்பது கண்டனத்திற்குரிய விஷயம் என அவர் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்:

உலகப் பொதுமறை என கொண்டாடப்படும் திருக்குறளை படைத்த திருவள்ளுவர், சாதி – மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர். வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:

இது தேவையற்ற சிக்கல்களை உண்டாக்கும் செயல். தமிழ்ச்சமூகம் பண்பான சமூகம் என்பதால், அது போர்க்குணம் அற்றதாகி விட்டது. நாகரிகமாகி விட்டதால், வீதியில் இறங்கிப் போராடுவது குறித்து தமிழ்ச்சமூகம் வெட்கம் அடைகிறது. ஆனால், தன்மானத்திற்கு இழிவு வரும்போது, வெகுண்டெழுந்தால் அது பெரும் பிரச்சினையாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *