சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ்

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) மற்றும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கடுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லி, ஏப்ரல்-1

பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-22-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இதில் அதிகபட்சமாக 1.1 சதவீதம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் ஓராண்டு கால வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல 2 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 0.5 சதவீதமும், 3 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 0.4 சதவீதமும், 5 ஆண்டுகால வைப்பு நிதி திட்டங்களுக்கு 0.9 சதவீதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைத்து 5.9 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்ட வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

கிசான் விகாஸ் பத்திரங்களின் ஆண்டு வட்டிவிகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாக்கப்பட்டு இருக்கிறது. சேமிப்பு வைப்புத்தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் முதல் முறையாக 0.5 சதவீதம் குறைத்து 3.5 சதவீதமாக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை நேற்று நிதியமைச்சகம் குறைத்த நிலையில் இன்று அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசாங்கத்தில் அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் ஏற்கெனவே 2020 2021 கடைசிக் காலாண்டில் இருந்த விகிதத்திலேயே தொடரும். நேற்றிரவு வெளியிடப்பட்ட புதிய வட்டி விகித அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *