ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை,, பெண்களை அவமதிக்கும் வகையில் எதிர்காலத்தில் பேசக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் கண்டிப்பு

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஆ. ராசாவின் பெயரை, நட்சத்திரப் பேச்சாளர்கள் என்ற பட்டியலிலிருந்தும் தேர்தல் ஆணையம் நீக்கியதோடு, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காகக் கண்டிப்பும் தெரிவித்துள்ளது.
தனது பேச்சு குறித்து ஆ. ராசா நேற்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்திருந்த நிலையில், 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-1

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து சமீபத்தில் மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை, திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ”முதல்வரின் அம்மாவைப் பற்றிப் பேசியது தவறாகக் கொண்டு செல்லப்படுவதால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதல்வர் கண்கலங்கியதைப் பார்த்தேன். அதற்காக முதல்வரிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்” என ஆ.ராசா தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்று (மார்ச் 31), தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு ஆ.ராசா இடைக்கால பதில் அனுப்பினார். அதில், தான் நடத்தை விதிகளை மீறும் எந்தவொரு விஷயத்தையும், தரக்குறைவாகவோ, பெண்களின் தாய்மையின் கவுரவத்தைக் குறைக்கும் விதத்திலோ பேசவில்லை எனத் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமை குறித்து உவமானத்துடன் பேசியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த சர்ச்சைப் பேச்சு காரணமாக, ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை விதித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

48 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவை நீக்கியுள்ளது. மேலும், மேலும், ‛ராசாவின் பேச்சு கண்ணியக்குறைவாக மட்டும் அல்ல தாய்மையை இழிவு செய்யும் வகையில் உள்ளது’ என்றும், ‛இனி அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ, பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ ஆ.ராசா பேசக்கூடாது’ என கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

பிரசாரம் செய்ய 2 நாள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். பிரசாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் நாளை அவசர வழக்காக விசாரிக்க ராசா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி அமர்வு அதனை ஏற்க மறுத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *