நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி.. ‘தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றதற்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஏப்ரல்-1

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினரைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை, ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

“இன்றும் என்றும் இனிய நண்பரும் – தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்துக்கு, ‘தாதா சாகேப் பால்கே விருது’ கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது.

நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினியை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்! அவரது கலைப் பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினியால் செழிக்கட்டும்”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *