ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது.. முதல்வர் ஈ.பி.எஸ். போனில் வாழ்த்து

ரஜினிக்கு பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-1

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினரைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை, ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினிக்குத் தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது:

“தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக, இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *