ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு

சென்னை, ஏப்ரல்-1

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட டைரக்டர் பாலச்சந்தர் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்துக்கு 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரை எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் இருந்து இந்த உயரிய விருதை பெறும் 2-வது நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் இந்திய அளவில் சாதனைப் புரிந்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். வங்க மொழி படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

சாதாரண பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கை தொடங்கிய ரஜினிகாந்த் 1973-ம் ஆண்டு சென்னைக்கு வந்து திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றார்.

பின்னர் 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தபோதிலும் ரஜினி நடிப்பு வரவேற்பு பெற்றது.

இதன் பின்னர் 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் பெண் ஆசை பிடித்தவராக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். இது சிறந்த நடிகராக அவரை அடையாளம் காட்டியது.

16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த் வில்லன் வேடத்தில் கவர்ந்து இருப்பார்.

இதன் தொடர்ச்சியாக வெளிவந்த “புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை” போன்ற படங்களில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றார்.

‘பில்லா’, ‘போக்கிரி ராஜா’, ‘முரட்டுக்காளை’ போன்ற திரைப்படங்கள் ரஜினிகாந்தை அதிரடி நாயகனாக வெளிகாட்டியது. ‘தில்லுமுல்லு’ படம் மூலம் தனது சிறந்த நகைச்சுவை உணர்வையும் ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார்.

தனது 100-வது படமாக ‘ராகவேந்திரா’ படம் வெளியானது.

1980-ம் ஆண்டுகளில் வெளிவந்த ‘வேலைக்காரன்’, ‘தர்மத்தின் தலைவன்’ போன்ற சிறந்த பொழுதுபோக்கு நிறைந்த படங்களாக அமைந்திருந்தது.

1990-ம் ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 1995-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

அந்த படத்தில் ரஜினி பேசிய ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ வசனம் இப்போதும் பிரபலம். அந்த வகையில் தமிழக மக்கள் மனதில் பிரபலமான வசனமாகவே அது மாறியுள்ளது.

இதன் பின்னர் 2002-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘பாபா’ படம் தோல்வியை தழுவி இருந்தது.

இதன் பின் 2005-ம் ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’, 2007-ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’, 2010-ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

இதன் பின்னர் லிங்கா, கபாலி, காலா, 2.0, பேட்ட, தர்பார் உள்ளிட்ட படங்களும் வெளியானது. ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 168-வது படமாகும்.

ரஜினிகாந்த் 1983-ம் ஆண்டு பாலிவுட்டிலும் புகுந்து கலக்கினார். இந்தியில் அவர் நடித்த முதல் படம் ‘அந்தகானூன்’ அமிதாப்பச்சனோடு இணைந்து ரஜினிகாந்த் நடித்த இந்த படம் 74 தியேட்டர்களில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

1984-ம் ஆண்டு இந்தியில் அவர் மூன்று வேடங்களில் நடித்த ‘ஜான் ஜானி ஜார்த்தனன்’ படமும் பெரும் வெற்றியை பெற்றது. இதே போன்று ரஜினிகாந்த் நடித்த மற்ற மொழி படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.

ரஜினிகாந்த் இதுவரை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 6 முறை தமிழக அரசின் விருது ரஜினிக்கு கிடைத்துள்ளது. இதில் 4 முறை சிறந்த நடிகருக்கான விருதும், 2 முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. பிலிம்பேர் விருதையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

2014-ம் ஆண்டு பத்மபூ‌ஷண், 2016-ம் ஆண்டு பத்மவிபூ‌ஷண் ஆகிய விருதுகளையும் மத்திய அரசு ரஜினிகாந்துக்கு வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *