‘கலவர ஸ்பெஷலிஸ்டுகளை’ ஒற்றுமையால் முறியடிப்போம்.. கமல் அதிரடி ட்வீட்
கோவை, ஏப்ரல்-1

கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். புலியகுளத்தில் இருந்து இருச்சக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்ட அவர், ராஜவீதி தேர்முட்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக, இருசக்கர வாகனத்தில், பெரியகடை வீதியில் வந்த பாஜகவினர்,பெரியகடைவீதி நான்கு முனை சந்திப்பில் இருந்து நேராக சென்று ஒப்பணக்கார வீதிக்கு திரும்பும் வழியில் திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது பேரணியில் பங்கேற்ற ஒருவர், இஸ்லாமிய நபர் நடத்தி வந்த கடையின் மீது கல்லை வீசித் தாக்கினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்தச் சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, கல்வீச்சில் தாக்கப்பட்ட கடைக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் சென்று, அக்கடையின் உரிமையாளரிடம் சிறிது நேரம் உரையாடினார். நடந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர், அதே கடையில் புதியதாக ஒரு செருப்பை வாங்கி, புறப்பட்டுச் சென்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,‘‘ ஆதித்யநாத் வருகையின் போது, பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்துக்குரியவை. கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட சாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக்கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காக தான். ‘கலவர ஸ்பெஷலிஸ்டுகளை’ ஒற்றுமையால் முறியடிப்போம்,’’ என்று கூறியுள்ளார்.