பெண்களை தாயாக பார்க்க வேண்டும். திமுக அப்படி பார்க்கவில்லை..ராஜ்நாத் சிங் பேச்சு

ஓசூர், ஏப்ரல்-1

தளி தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார் மற்றும் ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கெலமங்கலம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

நம் இந்திய மக்களுக்கு தடுப்பூசி வழங்கி கரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்தது மட்டுமன்றி உலக மக்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கி பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். மேலும் வெண்டிலேட்டர் மற்றும்பி.பி.கிட் ஆகியவை தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க, இந்திய அளவில் மற்றும் உலகளவில் அவற்றை வழங்கி உலகையே காப்பாற்றிய பெரிய தலைவராக மோடி உயர்ந்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் மக்களை பிரித்தாளும் செயலை நிறுத்தவேண்டும். நல்லதேர்ந்த அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டும். இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் தாயாக பார்க்க வேண்டும். திமுக அப்படி பார்க்கவில்லை. தமிழக மக்கள் இந்த தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். சுமார் ரூ.1,140 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு அதன் மூலமாக 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக, பாஜகவை தேர்தலில் வெற்றி பெற வைத்தால் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கிவருகிறது. அதேபோல மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ஜல்ஜீவன் திட்டம்மூலமாக 2024-ம் ஆண்டுக்குள்நாட்டிலுள்ள அனைவருக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும்.

மதுக்கடைகள் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய சீரழிவை சந்தித்து வருகிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி ஏற்பட்டதும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் முற்றிலுமாக தடை செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தற்போதைய கரோனா பாதிப்பிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *