சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டு சிறை.. விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சின்னசேலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 33 லட்சம் அபராதம் விதித்தும் விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

விழுப்புரம், மார்ச்-29

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.பி. பரமசிவம்(72). இவர், கடந்த 1991 கால கட்டத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட (விழுப்புரம், கடலூர்) அதிமுக செயலாளராக இருந்துள்ளார். 1991 சின்னசேலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 1991 முதல் 1996 வரையில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பரமசிவம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் துறை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இதில், பரமசிவம், அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் மீது கடந்த 1998-ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் தடுப்பு காவல் துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு பின்னர் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு சென்னையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பூங்கொடி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதன் பிறகு, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி. பரமசிவம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.33 லட்சத்து 4 ஆயிரத்து 168 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், கடந்த 17.6.1991 முதல் 13.51996 வரையிலான கால கட்டத்தில் பரமசிவம், அவரது மனைவி பூங்கொடி, அவரது மகன்கள் மயில்வாகனம், பாபு மற்றொரு நபர் கோவிந்தன் ஆகியோர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களையும் பறிமுதல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பரமசிவம் தற்போது கட்சியில் முக்கியப் பொறுப்புகள் ஏதுவும் இல்லாமல் இருந்து வந்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *