தமிழகம், புதுச்சேரியில் மோடி நாளை பிரசாரம்

தாராபுரம், மார்ச்-29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டும், கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பொதுமக்களிடையே உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடி நாளை (30ம் தேதி) தாராபுரம் வருகிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் 3வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாருதி நகர் அருகே 68 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் பொதுக்கூட்டத்துக்கு மோடியின் வருகைக்காக 3 ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. நாளை மதியம் 12.30 மணிக்கு பொதுக்கூட்ட மேடையில் உரையாற்ற இருக்கும் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களம் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சார்ந்த 13 வேட்பாளர்களையும் மேடையில் அறிமுகப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் 16, அதிமுக 5, பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனிடையே பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை (30ம்தேதி) புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏஎப்டி மில் திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று தாமரை, ஜக்கு, இரட்டை இலை சின்னங்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், அனைத்து வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *