அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி

சண்டிகர், நவம்பர்-04

அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும், அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஷிவானி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள்.

இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர். சிறுமிக்கு ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு, குழந்தையின் உடல்நிலையை கேமரா மூலம் கண்காணித்தனர். சிறுமி தலைகீழாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருந்தாள்.

50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே, பொக்லைன் எந்திரம் மூலம் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டப்பட்டு இன்று காலை 9.30 மணியளவில் சிறுமியை மீட்டனர். பின்னர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுமார் 16 மணி நேரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமி, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டும் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *