கேரள அரசியலில் புதிய சர்ச்சை.. தவறான எண்ணத்துடன் சபாநாயகர் பிளாட்டுக்கு அழைத்தார்.. சொப்னா பகீர் குற்றச்சாட்டு..

‘கேரள சபாநாயகர் தவறான எண்ணத்துடன் என்னை அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்தார்,’ என சொப்னா வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம், மார்ச்-29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வந்த பார்சலை சந்தேகத்தின் பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை 20 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதில் 10க்கும் மேற்பட்டோர் ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, டாலர் கடத்தலில் உள்ள தொடர்பு பற்றி விசாரணை மேற்கொள்ள கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரும்படி கேரள சட்டசபை சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இதுபற்றி கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்கத்துறை ஆணையாளர் (தடுப்பு) சுமித் குமார் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமொன்றில், முதல் மந்திரி விஜயன் மற்றும் கேரள சட்டசபை சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருக்கு டாலர் கடத்தலில் தொடர்பு உள்ளது என தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதவிர 3 கேரள மந்திரிகள் மற்றும் சபாநாயகரின் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி ஸ்வப்னா சுரேஷ் தெளிவுடன் கூறியுள்ளார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரள ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆவணத்தின்படி, தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் விசாரணையில் கூறும்பொழுது, கேரள சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் தனிப்பட்ட மோசமான நோக்கங்களுக்காக திருவனந்தபுரம் நகரில் பெட்டா பகுதியில் உள்ள அவரது பிளாட்டுக்கு வரும்படி கூறுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஸ்வப்னா ஒப்பு கொள்ளாத நிலையில், ஓமனில் உள்ள மிடில் ஈஸ்ட் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழங்க சபாநாயகர் மறுத்து விட்டார் என ஸ்வப்னா கூறியுள்ளார்.

ஓமனை அடிப்படையாக கொண்ட கல்லூரி தவிர்த்து வேறு ஏதேனும் சொத்துகள் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு உள்ளனவா என்ற அமலாக்கத் துறையின் கேள்விக்கு பதிலளித்த ஸ்வப்னா, தனக்கு தெரிந்தவரை பெட்டாவில் உள்ள மாருதம் குடியிருப்பில் உள்ள பிளாட் அவருக்கு உரியது. ஆனால் வேறு யாருடைய பெயரிலோ அது உள்ளது என கூறியுள்ளார்.

சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறுகையில்,
‘‘அமலாக்கத் துறை என் மீது வீண் பழிபோடுகிறது. தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற செயல்களில் அமலாக்கத்துறை ஈடுபடுகிறது. ஆனால், இதை மக்கள் நம்ப மாட்டார்கள்,’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *