வானதி சீனிவாசன் துக்கடா தலைவர்… மக்கள் நீதி மய்யம் அறிக்கையால் சர்ச்சை

சென்னை, மார்ச்-29

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா? என்று கமல்ஹாசனுக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சவால் விடுத்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கள் தலைவரை பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம். அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறோம்.

முதலில் இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார்.
அதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக் கொள்ளலாம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும்.

ஏற்கனவே இருமுறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாக தோற்கத் தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *