பாஜகவை எதிர்க்க இந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

பா.ஜ.,வை விரட்ட தமிழகத்தைப் போல் இந்தியா முழுவதும் பலமான கூட்டணியை ராகுல்காந்தி அமைக்க வேண்டும் என சேலம் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சேலம், மார்ச்-29

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம், சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், தமிழகம் 50 ஆண்டு பின்னோக்கி போய் விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, மோடி, அமித்ஷாவுக்கு அடிபணிந்த ஆட்சியே நடக்கிறது. நீட் தேர்வினை உள்ளே நுழைத்தார்கள். புதிய கல்வி கொள்கையால் மாணவர்களின் கல்வியை பாழாக்கினார்கள். தாய் மொழியாம் தமிழ் மொழியை அழிக்க இந்தி திணிப்பை கொண்டு வருகிறார்கள். மாநில உரிமையை பறிக்கிறார்கள்.

எனவே, இப்படி வேதனையில் மிதக்கும் தமிழகத்தில் வரப்போவது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நாங்கள் ஏதோ வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகவும் உங்களைத் தேடி வரவில்லை. தமிழர்களின் சுய மரியாதை, தன்மானம் காக்கவும், இழந்த தமிழர் உரிமைகளை மீட்கவும் நடக்கும் தேர்தல் என்பதை உணர்ந்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். பழனிசாமிக்கும், பன்னீருக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. ஊழல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். காவிரி உரிமையை நமக்கு தராத மத்திய அரசு. அதனை தட்டிக்கேட்க தயங்குகிறது மாநில அரசு. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரின் மற்றும் 8 வழிச்சாலை என்று மத்திய அரசு, தமிழகத்தின் மீது ரசாயன தாக்குதல் நடத்துகிறது. இதேபோல், இந்தியை திணித்து தமிழகத்தில் வடமாநிலத்தவர்களை பணியமர்த்தி நமது பண்பாட்டை அழித்து கலாச்சார தாக்குதலையும் நடத்துகிறது. எனவே, மத்திய அரசு நடத்தும் ரசாயன தாக்குதலையும், கலாச்சாரா தாக்குதலையும் எதிர்கொள்ளும் தகுதி திமுகவிற்கு மட்டுமே உள்ளது. அது, அதிமுகவால் நிச்சயம் முடியாது.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நுழைய முடியாத பாஜ, ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு அனைத்து விஷயங்களையும் சதித் திட்டங்களாகவே நகர்த்துகிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அவரது பினாமிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் ரெய்டு, டிஜிபி வீட்டில் கூட ரெய்டு நடந்தது. கூட்டணி குறித்து பழனிசாமியிடம் கேட்டால், தமிழகத்திற்கு தேவையான நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கிறது என்கிறார். இது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். வர்தா புயல் நேரத்தில் தமிழக அரசு கேட்டது ரூ.22573 கோடி. ஆனால், வந்ததோ ரூ.266 கோடி. ஓகி புயல் நேரத்தில் தமிழக அரசு கேட்டது ரூ.9302 கோடி, ஆனால், வந்ததோ ரூ.133 கோடி. கஜா புயல் நேரத்தில் கேட்டது ரூ.17899 கோடி. வந்ததோ ரூ.1142 கோடி. இதேபோல, நிவார் புயல், புரவி புயல் என்று எதற்கும் கேட்ட நிதி வந்து சேரவில்லை.

ஜிஎஸ்டியாக தமிழகத்தில் இருந்து செலுத்தும் நிதிக்கான பங்கு தொகையும் வந்து சேரவில்லை. கொரோனா காலத்திலும் கேட்ட நிதியை தமிழகத்தற்கு தரவில்லை. பிறகு எதற்காக அவர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும்? இங்கே, இளம் தலைவரான ராகுல் காந்தி முன் முக்கியமான 2 கோரிக்கைகளை வைக்கிறேன். அவரை போனில் அழைத்து பேசும்போது சார் என்பேன். ஆனால், அவரோ சகோதரர் என்று கூறுங்கள் என்பார். அந்த வகையில், அன்பான சகோதரர் ராகுல் காந்திக்கு, எனது வேண்டுகோள் இது தான். இன்று, இந்தியா மதவாத பாசிச கும்பலிடம் சிக்கி மூச்சுத்திணறி நிற்கிறது. அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. தமிழகத்தில் நாம் அமைத்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை உள்ளே வர முடியாமல் செய்தது. சட்டமன்றத் தேர்தலிலும் பாஜ வாஷ் அவுட் ஆகும் என்று கருத்து கணிப்புகள் சொல்கிறது.

தற்போது, ஆட்சியில் உள்ள பாஜ பெற்ற மொத்த வாக்குகள் 37 சதவீதம். அதற்கு எதிரான வாக்குகள் 63 சதவீதம். இப்படி, பாஜவை எதிர்த்து மக்கள் அளித்த 63 சதவீத வாக்குகள் பிரிந்து விட்டது. தமிழகத்தை போல் சரியான கூட்டணி இந்தியா முழுவதும் அமைய வில்லை. எனவே, இதுபோன்ற கூட்டணி அமைய ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தலைவர் கலைஞர் இறந்த போது, அண்ணா நினைவிடத்தற்கு அருகில் அடக்கம் செய்ய பழனிசாமி அரசு அனுமதிக்கவில்லை. மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் என்று பலரும் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்களிடம், ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியவர், பிரதமர்களை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும் ஒட்டுமொத்த தமிழின தலைவராக விளங்கியவருமான கலைஞருக்கு இடம் ஒதுக்க நீங்கள் உதவிட வேண்டும் என்றேன். ஆனால், அவர்கள் பார்க்கிறோம் என்று தலையாட்டினார்களே தவிர, இம்மியளவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு இனி நாம் தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா?

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *