நடராஜன் வீசிய கடைசி ஓவர்.. ‘திரில்’ வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது.

புனே, மார்ச்-29

இந்தியா வந்த இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி புனேயில் நடந்தது. இங்கிலாந்து அணியில் டாம் கர்ரனுக்கு பதிலாக மார்க் உட் தேர்வானார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய தவான், 44 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த போது ரஷித் ‘சுழலில்’ ரோகித் (38) போல்டானார். தொடர்ந்து அசத்திய ரஷித் பந்தில் தவான் (67) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி (7), லோகேஷ் ராகுல் (7) ஏமாற்றினர். பின் இணைந்த ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்ட்யா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது.

அபாரமாக ஆடிய ரிஷப் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த போது ரிஷப் (78) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா (64), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். குர்னால் பாண்ட்யா (25), ஷர்துல் தாகூர் (30) நிலைக்கவில்லை.

இந்திய அணி 48.2 ஓவரில் 329 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 3, ரஷித் 2 விக்கெட் கைப்பற்றினர்.

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (14), ஜானி பேர்ஸ்டோவ் (1) ஏமாற்றினர். பென் ஸ்டோக்ஸ் (35), கேப்டன் பட்லர் (15), லிவிங்ஸ்டோன் (36), மொயீன் அலி (29) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சாம் கர்ரான் அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 50வது ஓவரின் முதல் பந்தில் மார்க் உட் (14) ‘ரன்-அவுட்’ ஆனார். அடுத்த 5 பந்தில் 4 ரன் மட்டுமே கிடைத்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 322 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சாம் கர்ரான் (95) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 4, புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டி கொண்ட தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *